சிறைகளில் 'கொரோனா' தடுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள சிறைகளில், அளவுக்கதிகமான கைதிகள் உள்ளனர். இந்நிலையில், 'கொரோனா' வைரஸ் எங்கும் பரவி வரும் நிலையில், உச்ச நீதிமன்றம், இந்தப் பிரச்னையை, நேற்று தானே விசாரணைக்கு எடுத்து கொண்டது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி எல்.என்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, பிறப்பித்த உத்தரவு: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சிறைகளிலிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, தலைமை செயலர்கள் மற்றும் சிறைத்துறை டைரக்டர் ஜெனரல், 20ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இந்தப் பிரச்னையில், நீதிமன்றத்திற்கு உதவும் வகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரப்பில், அதிகாரி ஒருவரை, 23ம் தேதி நியமிக்க வேண்டும்.

கைதான சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இல்லங்களின் உள்கட்டமைப்பு வசதிகளையும், கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா பரவுவதை தடுக்க, சில மாநிலங்கள் தகுந்த நடவடிக்கைகள் எடுத்துள்ளன. சில மாநிலங்கள், முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறைகளில், அளவுக்கதிகமாக கைதிகள் இருப்பதால், கொரோனா பரவுவதை தடுக்க, சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டியது உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.